இருள் மறைத்த நிழல் -01

அதிகாலை சூரியனின் இளஞ்சூடு அந்த காலை குளிருக்கு இதமாக இருந்தது. மனதை அழுத்தும் பாரம் ஒரு புறம் இருந்தாலும் இயற்கையின் எழிலில் தன் மனதை பிடிவாதமாக திருப்பினாள் மிதுனா. அந்த பிரம்மாண்டமான வீட்டின் கம்பீரமும், அப்பொழுதுதான் பூத்திருந்த செவ்வரளி பூக்களும்,வீட்டின் வாயில்வரை இருபுறமும் சீராக பூத்து குலுங்கும் ரோஜாக்களும், எங்கும் செயற்கை வண்ணம் தோன்றாமல் அற்புதமாய் இருந்த அந்த தோட்டத்தின் ஒட்டுமொத்த நேர்த்தியும் அவளது கலக்கத்தை கொஞ்சம் மறக்கடிக்கத்தான் செய்தன. வீடா அது? மாளிகை என்பது பொருத்தமாக இருக்கும்.

அவள் மனதில் பரவி இருந்த இனம் புரியாத நிம்மதி அவளுக்கு வியப்பாக இருந்தது. இதில் உள்ள மனிதர்களும் அவளுக்கு அதே நிம்மதியை தருவார்களா? உள்ளடக்கிய பெருமூச்சும் கொஞ்சம் நம்பிக்கையின்மையுமாய் தான் வாயிலை நோக்கி அடுத்த அடியை வைத்தாள் மிதுனா. இவ்வளவு பெரிய வீட்டின் வாயிலில் ஒரு காவலாளியை கூட காணோமே என்று அவள் எண்ணிக்கொண்டு இருக்கையிலேயே, "என்னம்மா வேண்டும்? நீங்கள் யார்?" என்று கேள்விகளோடு ஒரு வேலையாள் அவளை நோக்கி விரைந்து வந்தான்.

எதிர்பாராது கேட்ட குரல் என்றாலும், எதிர்பார்த்திருந்த கேள்வி தான் என்பதால் தடுமாறாமல் அவளால் பதிலுறுக்க முடிந்தது. "இங்கே சுந்தரம் தாத்தா..சாரை பார்க்க வேண்டும். என் பெயர் மிதுனா. சந்தானம் ஐயா பேத்தி என்று சொன்னால் சாருக்கு தெரியும்."


சுந்தரம் முன்னாலேயே தகவல் தந்திருப்பார் போலும், வேலையாளின் பாவனை உடனே மாறி ஒரு மரியாதை அவனை தொற்றிக்கொண்டது. "அய்யா சொன்னாருங்கம்மா. ஆனா இன்னிக்கு வருவீங்கன்னு தெரியாது. நீங்க உள்ள போங்க. முன்னறைக்கு வலது பக்க அறையில் தான் பெரியவர் இப்போது இருப்பார். " என்று சொல்லி வழியும் காண்பித்துவிட்டு தோட்டத்திற்கு தண்ணீர் விட்ட குழாயை சுற்றி வைக்க சென்றுவிட்டான்.

ஹ்ம்ம்.. வழி காண்பித்ததோடு அவன் வேலை முடிந்து விட்டது. இனி உள்ளே சென்று என்ன சொல்ல போகிறாள்? 'என் தாத்தா காசிக்கு செல்லவேண்டி இருப்பதால்..எனக்கு வேறு போக்கிடம் இல்லாததால், நீங்கள் என் தாத்தாவிற்கு உயிர் சிநேகிதர் என்பதால், கொஞ்ச நாள் .. என் தாத்தா வரும் வரை, உங்கள் பாதுகாப்பில் இருக்க அனுமதி கொடுங்கள் ' என்றா? எவ்வளவு சங்கடமாக இருக்கிறது? இந்த தாத்தாவிற்கு ஏன் இதெல்லாம் புரியமாட்டேன் என்கிறது?

ஆனால், இத்தனை வருடங்களாக தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக ஒரு குறையும் இன்றி அருமையாக வளர்த்து, தன் கடைசி ஆசை வாழ்நாளில் ஒரு முறை காசிக்கு சென்று வருவது ஒன்று தான் என்று அவர் கூறியபோது அவளே தான் இந்த யோசனையை அவருக்கு சொன்னாள். குறிப்பாக இந்த சுந்தரம் தாத்தா வீட்டில் விடுங்கள் என்று கூறவில்லை என்றாலும், ஒரு நல்ல லேடீஸ் ஹாஸ்டலில் பாதுகாப்பாக இருப்பேன் தாத்தா என்று கூறியது அவள்தான். அவர் தான் ஒரு வாரம் கழித்து இந்த சுந்தரம் தாத்தாவை பற்றி அவளுக்கு சொல்லி அவளையும் சம்மதிக்க வைத்து இங்கே அனுப்பியும் வைத்தார். ஏதோவொரு லேடீஸ் ஹாஸ்டலில் அவளை விட அவருக்கு உடன்பாடில்லை.

சுந்தரம் அவரின் நெருங்கிய நண்பர். பால்ய சிநேகிதம். ஒரே குடும்பம் போல அந்நியோன்யமாம். பிறகு காலப்போக்கில் தத்தம் குடும்பம் என்று விதி அவர்களை பிரித்தது. அதே விதி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தற்செயலாய் சந்திக்கவும் வைத்தது. பிரிந்த நட்பு அதே சுருதியில் தொடங்கிய காலகட்டத்தில் தான் சந்தானத்தின் இந்த காசி பயணமும், அதன் விளைவாக மிதுனாவின் இந்த 'சுந்தரவன' பயணமும்.

முகம்கூட பார்த்தறியாத அந்த சுந்தரம் தாத்தா..அய்யா என்று சொல்ல வேண்டுமோ..அவர் அவளை எப்படி எதிர்கொள்வார்? அவர் அவளை நன்றாகவே நடத்தினாலும், அவரது குடும்பத்தாருக்கு அவள் வரவு நல்வரவாகுமா? காவலாளியின் பாவனையில் இருந்த வரவேற்புத் தன்மை சற்று தெம்பளித்தது. அவள் மேலும் குழம்பி தயங்குமுன், அந்த காவலாளி சொன்ன முன்னறையையே அடைந்துவிட்டாள். மேற்கொண்டு தானே வலபக்க அறை நோக்கி செல்வதா அல்லது குரல் கொடுப்பதா என்று அவள் தன்னுள் தர்க்கம் செய்தவாறே சில அடி எடுத்து வைத்து, பாதி சாத்தியிருந்த அந்த அறை கதவில் கை வைக்க, "வேறு ஏதாவது பேசுங்கள், தாத்தா!" என்று கணீரென்ற ஆண் குரல் ஒன்று அவளை தடுத்து நிறுத்தியது.

அறை வாயிலில் நிழலாடியதை கண்டு தலை திருப்பிய அந்த வளமான குரலுக்கு சொந்தக்காரன், கடுகடுத்த முகத்தோடு நிதானமாக எழுந்து அவளருகே வந்தான். வந்த அந்த இளைஞன் அதே கோபத்தோடே கேட்டான், "யார் நீ? கதவை தட்டி அனுமதி கேட்கும் 'basic manners' கூட தெரியாதா?"

அவளுக்கு அவமானமாக இருந்தது. இந்த அறையாக இருக்குமோ என்ற எண்ணத்தில் கதவின் மேல் கையை வைத்து விட்டாள் தான். ஆனால் பாதி சாத்தியிருந்த கதவு அப்படி எளிதாய் திறந்து கொள்ள..உள்ளே இவன் யாருடனோ பேசிக்கொண்டிருப்பான் என்று அவளுக்கு எப்படி தெரியும்? அதற்கு இவ்வளவு கடுமையா? வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம்? அவள் என்ன வேண்டுமென்றா ஒட்டு கேட்டாள்? அல்லது, அப்படி தான் இவர்கள் ரகசியம் பேசினார்களா? ஊருக்கே கேட்கும்படி உரக்க பேசிவிட்டு தன மேல் பாய்ந்தால் எப்படி? அப்படியே சிதம்பர ரகசியம் பேச வேண்டுமென்றால் கதவை தாளிட்டுக்கொண்டு பேச வேண்டியதுதானே? அவளுள்ளும் கோபம் குமுறிக்கொண்டு வர அவனுக்கு சரியாய் பதில் தர வாயெடுக்கையில், அவன் மேலும் கடுகென பொரிந்தான்.

"Hello?! கேட்டது புரியவில்லையா? தமிழ் தானே?" எரிச்சலும், கிண்டலுமாய் அவன் வினவ, வேகமாய் கைப்பையில் கிடந்த அந்த கடிதத்தை எடுத்தாள் மிதுனா. கணநேரத்தில் முடிவெடுத்து அதுவரை அசைவின்றி அவளை ஒரு சுளித்த பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்த அவனை தவிர்த்து, அவன் 'வேறு ஏதாவது பேச சொன்ன' அந்த தாத்தாவிடம் சென்று நீட்டினாள். அவர்தான் அவள் தேடி வந்த சுந்தரம் தாத்தாவாக இருக்க வேண்டும். இந்த கடுவன் பூனையிடம் அவளுக்கென்ன பேச்சு?!

கடிதத்தை மேலெழுந்தவாரியாக படித்துவிட்டு, "வாம்மா, உன்னை ரொம்பவும் எதிர்பார்த்திருந்தேன். பயணத்தில் களைத்திருப்பாய். குளித்து முடித்து, ஏதாவது சாப்பிட்டுவிட்டு வாம்மா. ஆற அமர பேசலாம்.", என்று பாசமாய் கூறினார்.

"தாத்தா, நான்.." என அவள் ஏதோ கூற வந்ததை தடுத்து, "எல்லாம், அப்புறம் பேசிக்கொள்ளலாம்..இதை உன் வீடாய் நினைத்துக்கொள் அம்மா" என்றார்.

அவரது உபசரிப்பு உள்ளத்தை தொட, சரி என தலை ஆட்டியவள், அவனை ஒரு வெற்றி பார்வை பார்த்தாள்.

என்னை கதவை தட்டி விட்டு வரச்சொன்னாயே, இப்போது பார், உன் தாத்தா எனக்கு கொடுத்த உரிமையை என்று அவனுக்கு பதிலடியாகத்தான் அவள் அவனை நோக்கினாள். அவளிடம் கடுமையாக பேசியதற்கு ஒரு வருத்தத்தையோ அல்லது குறைந்த பட்சமாக, அதீத கோபத்தையோ அவனிடம் எதிர்ப்பார்த்தவளுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.ஒரு கூரிய பார்வையை மட்டுமே அவள்பால் செலுத்தியவன், மேற்கொண்டு பேச விருப்பமோ, தெம்போ இல்லாதவர் போல முகம் சோர ஒரு பெருமூச்சு விட்ட தன் தாத்தாவை யோசனையோடு பார்த்தான்.

அவன் பார்வையை கவனித்த பெரியவர், "முத்துவிடம் சொல்லியிருந்தேன்..இவளுக்கு ஒரு அறையை ஒழித்து வைக்க..அவனிடம்..போகும் போது அவனிடம் சொல்லி விடப்பா.." என்று கோர்வையாக பேச முடியாது களைத்து போய் கண்களை மூடிக்கொண்டார்.

அவரை தொந்தரவு செய்ய விரும்பாமல், ஒரு கையசைவில் 'வா' என்று சைகை செய்த அவன், பின்னோடு அவள் வருகிறாளா, இல்லையா என்று கூட சட்டை செய்யாது அறையை விட்டு வெளியேறினான். அவனது துரித நடைக்கு ஈடு கொடுக்க அவள் கிட்டத்தட்ட ஓட வேண்டியிருந்தது.

மகா அலட்சியம் தான்! 'வா' என்று வாய் திறந்து அழைத்தால், தன் உயரத்தில் ஒரு இன்ச் குறைந்து விடுவானாக்கும். மனதுள் குமுறியவாரே அவனை வேக வேகமாக பின்தொடர்ந்தவள் அவன் சட்டென வெளி வாயிலில் நிற்க, அவன் முதுகின் மீது கிட்டத்தட்ட மோதியே விட்டாள்.

"Sorry Sir, Sorry..." என அவள் திணற மறுபடியும் அவன் முகத்தில் அதே ஏளனம். வேண்டுமென்றே அவனை இடித்ததாக நினைக்கிறானா? இருக்கும். எடுத்த எடுப்பிலேயே ஒட்டு கேட்டதாக நினைத்தவன் தானே! மனம் சோர்ந்தது மிதுனாவுக்கு. பேசாமல் ஏதாவது ஒரு விடுதியில் கௌரவமாக தங்கி இருக்கலாம்.

அவன் வந்ததை கவனித்த ஒரு வேலையாள் கையில் இருப்பதை அப்படியே கீழே போட்டுவிட்டு அவர்களை நோக்கி விரைந்து வந்தான்.முகத்தின் கடுமை மறைய, சாதாரண குரலில், "முத்து. இந்த அம்மாவிற்கு கீழே ஏதேனும் ஒரு அறையை ஒழித்து கொடு" என்றவன், அந்த முத்து ஏதோ கேள்வி கேட்க போவதை யூகித்து, "எனக்கு நேரமாகி விட்டது, எதுவானாலும் தாத்தா எழுந்தபின் அவரிடமே கேட்டுக்கொள்" என்று பொறுமையின்றி கைகடிகாரத்தை பார்த்தான்.

ஒரு அவசரத்தோடே அவள் பக்கம் திரும்பி, " ஏதும் தேவை என்றால் முத்துவை கேள். பெரும்பாலும் தோட்டத்திலோ வெளி வெரண்டாவிலோ தான் இருப்பான்" என்றவன், அதே அவசரதோடே தன் கார் garage-ஐ நோக்கி விரைந்தான். எடுத்த எடுப்பிலேயே ஏக வசனமா என்றிருந்தது அவளுக்கு.


முத்துவுக்கு என்ன குழப்பமோ தெரியவில்லை..தன் சின்ன முதலாளி சென்ற திசையையே சில வினாடிகள் பார்த்தவன், "சரி தான்.. பெரியவர் எழ இன்னும் நேரமிருக்கு..எப்படியும் பெரிய அய்யா சொன்னபடி தானே..சின்ன அய்யாவும் அதானே சொன்னார்.." என்று தனக்குத்தானே பேசிக்கொண்டது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ முடிவுக்கு வந்த முத்து, "வாங்கம்மா" என்று அவளை மீண்டும் வீட்டினுள் மாடி நோக்கி அழைத்துச சென்றான். ஆனால்..அவனுடைய 'சின்ன அய்யா' கீழே ஒரு அறை என்று தானே சொன்னான்?! மனம் தன் பாட்டில் குழம்பினாலும், கேள்வி ஏதும் கேட்காமல், மாடியில் அவன் காட்டிய அறைக்குள் சென்றாள். கையில் இருந்த பெட்டியை தரையிலும் , தோளில் கிடந்த தன் கைப்பையை அருகிருந்த ஒரு மேஜையிலும் வைத்துவிட்டு, "ரொம்ப thanks, முத்து" என்றாள்.

முகமலர்ந்த முத்து, "இருக்கட்டும்மா, எதுவும் தேவை என்றால் ஒரு குரல் கொடுங்க, ஓடி வந்துடுவேன்" என்று பவ்யமாய் கூறி கீழே இறங்கி சென்றுவிட்டான். கதவை சற்று தள்ளியவுடன் அதுவே மூடிக்கொண்டது. auto-lock போல! AC பொருத்தப்பட்ட அந்த அறையை நோட்டம்விட்டவள் ஒரு விருந்தாளியாக வந்த தனக்கு இவ்வளவு வசதியான அறையை ஒதுக்கியிருக்கிறார்களே என்று அதிசயித்துப்போனாள். சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு உயர் தர நட்சத்திர ஹோட்டல் அறை போன்று இருந்தது. சமையலறை ஒன்று தான் இல்லை. ஆனால் ஒரு குட்டி microwave-ம், mini fridge-ம் அந்த குறையை ஈடுகட்டின. ம்.. பணம் இருந்தால் எதுவும் செய்யலாம்
 தான்! ஊரில் தாத்தாவுடன் வசித்த அந்த சின்ன வீடு நினைவில் வந்தது. தலையை சிலுப்பினாள் மிதுனா. அன்பு ஒன்றே பிரதானமாக தாத்தாவோடு வசித்த, இனியும் வசிக்கப்போகும் இனிய இல்லம் அது ... அதை போய் இந்த தங்க கூண்டோடு ஒப்பிட்ட தன் மடமையை என்ன சொல்ல?!

வாழ்ந்து கெட்டவர் அவள் தாத்தா சந்தானம். தொழிலில் நொடித்துப்போனாலும், வயது பெண்ணான பேத்தியோடு கௌரவமாக வாழ தேவையான அளவிற்கு பணம் கையில் மிஞ்சியது. பணம் மட்டும் தான். மற்றபடி நிம்மதியையும், கௌரவத்தையும் கெடுக்கத்தான் இறந்து போன மகனின் இரண்டாம் தாரத்தின் வழியில் ஒரு முப்பது வயது மலை மாடு வந்து தொலைத்ததே! மிதுனாவை கட்ட வந்த முறை மாமன் என்று சொல்லிக்கொண்டு வேறு!

அந்த குடிகார வரதனுக்கு பயந்துதான் தாத்தா அவள் விடுதியில் தங்க மறுத்திருப்பார் என்று மிதுனாவுக்கு தோன்றியது. ஆனால் அவ்வளவு அவள் பாதுகாப்பிற்காக பார்ப்பவர், அவளை யார் பாதுகாப்பிலாவது இப்படி விட்டுவிட்டு, காசி யாத்திரை செல்ல துடித்ததுதான் அவளுக்கு புரியவில்லை.

ச்சு..பாவம் தாத்தா. தனக்கென இதுவரை ஒன்றும் செய்து கொண்டதில்லை. இந்த காசி பயணம் தவிர. இளவயதிலேயே மனைவியை இழந்த பின் தன் ஒரே மகனுக்காக மறுமணம் செய்து கொள்ளாதவர். தாய்க்கு தாயாய் , தந்தைக்கு தந்தையாய் அவர் வளர்த்த அதே மகன், தன் முப்பதாவது வயதில் , அவனது மனைவி மறைந்த அடுத்த வருடமே வேறு பெண்ணை பிடிவாதமாய் மணந்து வந்து காலில் விழுந்ததும், மனம் நொந்து, பேத்தியின் நல்வாழ்விற்காக தள்ளாத வயதில் மீண்டும் ஒரு முறை மிதுனாவுக்காக தாயாய் தந்தையாய் தன்னையே அர்ப்பணித்தவர். அவரது சொந்த ஆசையாய்..ஒரே ஆசையாய் அவர் அவளிடம் வாய்விட்டு சொன்னது இந்த காசி யாத்திரை ஒன்றுதான்.

அதற்கும் தான் எவ்வளவு முன்னேற்பாடு! தன் பால்ய சிநேகிதரான இந்த சுந்தரம் தாத்தாவிடம் பேசி, பேத்தி தங்கிக்கொள்ள பாதுகாப்பு செய்து, கூடவே படித்த படிப்பிற்கும் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து தர சொல்லி..வேலை..அடடா..அதுபற்றிக்
கூட கீழே சுந்தரம் தாத்தாவிடம் பேச வேண்டுமே..பரபரத்தது அவளுக்கு. உடை விஷயத்தில், இன்ன பிற விஷயங்களில் ரொம்பவும் கட்டுப்பாடு விதித்த தாத்தா, அவள் வேலைக்கு போக விரும்பியதை மட்டும் தட்டிப்பேசியதே இல்லை! சுய சம்பாத்தியம் வெகு அவசியம் என்று நினைத்தாரோ?! இதே சுந்தரம் தாத்தாவிடம் சொல்லி இருப்பதாகவும், அவர்களது கம்பெனியிலோ அல்லது அவர்களுக்கு தெரிந்த இடத்திலோ சுந்தரமே அவளுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்வார் என்றும் சந்தானம் சொல்லியிருந்தார். இன்றே எப்படியாவது சுந்தரம் தாத்தாவிடம் வேலை பற்றி பேச வேண்டும்..அப்படியே..முடிந்தால்
paying guest-ஆக தங்கி கொள்ள விருப்பம் என்றும் சொல்லிவிட வேண்டும் என்று மனதுக்குள் குறித்துக்கொண்டாள்.

                                                                    BY:

Cond...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இருள் மறைத்த நிழல் -01"