இன்றைய இலக்கியத்தின் ஜாம்பவான்

பாரி என்ற பெயர் கொண்டவள்ளண்மைமிக்க கடைச்சங்க காலக் குறுநில மன்னன் முல்லைக் கொடி படர்வதற்காக தனது தேரினையே வழங்கினாராம்! நான்கு தொழிலாளர்களை அமர்த்தி சில மணி நேரத்தில் கச்சிதமான ஒரு பந்தலை அமைத்து முல்லையைப் படரவிட்டிருக்கலாம். அதற்குப் பதிலாக தனது தேரினைக்கொடுத்தார் என்பது அவரின் வள்ளண்மையைச் சிறப்பித்துப் பாராட்டுவதற்கான புலவரின் அதீத கற்பனை. யதார்த்தத்துக்கு ஒவ்வாதது. “செங்கை ஆழியான் என்று அழைக்கப்படும் கலாநிதி க. குணராசா தமது தலைமுறைக் காலத்தில் கலை இலக்கியம் கல்வி முதலிய கொடிகள் தலையெடுத்து வளர்வதற்கான கொழுகொம்பாக விளங்கியவர் என்பது கற்பனை அல்ல நிஜம்.சிவந்த நிறம், எடுப்பான தோற்றம், கணீரென்ற குரல் வளம், ஞானத்தின் ஆழத்தை எடுத்துக் காட்டும் விழிகள், முகத்தில் சாந்தம் நிறைந்த களை, தர்மத்தை நீதியை நியாயத்தை, மனித நேயத்தை, உண்மையாக விசுவாசிக்கும் இலக்கிய நெஞ்சு. கனவில் கூட எவருக்கும் எள்ளளவும் தீமை நினைக்காத ஆனால் எல்லோருக்கும் ஓடோடிச் சென்று அவர்களின் இடர் களைந்து நன்மை புரிகின்ற பெரியவர். மனத்தினால், வாக்கினால், செயல்களினால் பெரியவராக பெருந்தன்மை கொண்டவராக விளங்கி பொதுவாழ்வில் முடிசூடா மன்னராகப் பொது மக்களால் மதிக்கப்படுகிறார். எவரிடத்திலும் அவர் சொல் செல்லக் கூடியதாக இருக்கிறது.

எல்லோருக்கும் நல்லவர். பழகுவதற்கு இனியவர். பண்பாளர். நட்பைப் பெரிதும் மதிப்பவர். அடக்கமான ஆழ்ந்த சிந்தனையாளர். அதிகமாக வார்த்தைகளை உதிர்ப்பதில்லை. எடுத்த காரியம் சிறப்பாக முடியும் வரை ஓய்ந்திருக்கவே தெரியாதவர். அதனால்தான் வரலாற்றுச் சம்பவங்கள் பல சிறப்புறக் காரணகர்த்தõவாகத் திகழ அவரால் முடிந்தது. எமது தமிழ்க் கலை இலக்கியங்களின் மேம்பாட்டுக்காக பின்னணியில் நின்று பலகாலமாக ஊக்கமளித்து ஆரோக்கியமான புதுமையான பல பூக்கள் மலர்வதற்கு வழி காட்டிய இவர் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்த மேதை. அவரின் எழுத்துக்களால் ஈர்க்கப் பெற்றவர்கள் அவர் மீது அளவிறந்த பற்று அல்ல பக்தியே கொண்டிருந்தனரென்று கூறுலாம். பேரறிஞர் என்ற மிடுக்கோ, தலைக்கனமோ இல்லாதவராக அவரை நான் காண்கின்றேன். அத்தோடு ஈழத்து இலக்கியக்காரர்கள் அநாதைகளல்லர் அவர்களுக்கென்று பாரம்பரியம் உண்டு. அதற்கான வேர்களைத் தேடிக் கண்டுபிடித்த முன்னோடி..

மெல்லிய உள்ளங் கொண்ட இவர் எத்தனை நெருப்பாறுகளைக் கடந்து வந்திருக்கிறார் என்பதை அறியும் போது அவருக்கிருக்கும் தன்னம்பிக்கை உறுதி விடாமுயற்சி என்பனவே ஒருவரின் வெற்றி வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைய முடியும் என்பது துலாம்பரமாகின்றது. இலக்கியத்துறையில் அவர் கையாண்ட புது உத்திகளுக்கு ஒரு முன்னுதாரணம் கிடையாது இன்னாருடைய பாணி இவருக்கிருக்கிறதென்று எவரையும் சொல்ல முடியாது. பிறமொழிக்கதாசிரியர்களில் கூட எவரையும் இவர் பின்பற்றியதாகத் தெரியவில்லை. அவரது நிலத்தில் தோன்றிய விளைச்சல்களுக்கு அவரே விதை. அவரே நீர். அவரே உரம். அதனால்தான் முன்னொருவரில்லை. பின்னொருவரில்லை என்ற இடத்தை செங்கை ஆழியான் பிடித்திருப்பதை யாரும் மறுக்கமுடியாது..

இவருடைய எழுத்துக்களைப் படிக்கும்பொழுது ""கவிச்சக்கரவர்த்தி"" என்ற நாடகத்தில் ஒட்டக்கூத்தரின் கூற்றாக கு. அழகிரிசாமி சொல்வார் “கலைமகள் எனக்கு அருள் பாலிக்கிறாள். உமக்குச் சேவகம் செய்கிறாள்” என்று கம்பரிடம் கூறுவதாக அந்த வாசகம் அமைகிறது. செங்கையாழியானின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுதுதெல்லாம் இந்த வாசகம் தான் எனக்கு நினைவுக்கு வரும். செங்கையாழியானுக்கு தமிழ் சொற்களும் தமிழ் மொழி நடையும் கைகட்டிச் சேவகம் செய்கின்றன. சிறுகதை, நாவல், கட்டுரை எந்த வடிவமாயிருந்தாலும் எடுத்துக் கொண்ட விடயத்தைப் புதிய கோணத்தில் வாசகன் புரிந்து கொண்டு நெருங்கி வரும்படி அவனை ஈர்க்கும் சொல்லாற்றல் அவருக்குக் கைவந்தகலை..

அலட்டல் பிதற்றல் இல்லாமல் சுற்றிவளைத்துச் சோடிக்காமல் ""சுளீர்"" என வாசகர் உள்ளத்தில் பதியும் படியாக எழுதுவது செங்கை ஆழியானின் தனி ""ஸ்பெஷாலிட்டி"" இவரின் எழுத்து நடை சில இடங்களில் வெற்றிலைக் கொழுந்தாய்க் குழைகிறது. சில இடங்களில் தீக்கொழுந்தாயும் சுவாலை விடுகிறது. விடுதலைப் பாதையில் தொடங்கிய நெடும் பயணம் இந்நிகழ்ச்சித் தொடருக்கு உந்து சக்தியாக விளங்கிய மக்கள் எழுச்சியின் பெருமை சிறுமைகள் சாதனை சோதனைகள் தவறு திரிபுகள் இவற்றின் வடுக்களையும் எண்ணச் சுமைகளையும் இளநெஞ்சிலே தாங்கித் தமிழிலக்கிய உலகில் நுழைந்தவர் செங்கை ஆழியான்..

இந்நிகழ்ச்சித் தொடரின் பிரதிபலிப்பாக ஒரு நபருக்குள்ளே உருத்திரண்ட உளவளத்தின் உள்ளொளியின் புறநிலை அகநிலை வளர்ச்சிகளின் ஊடுருவலான அனுபவ அறிவுப் பின்னணியே அவரது இலக்கியத்துக்குப் பின்னணியாகும். எனவே எமது நாட்டின் சென்ற காலம் நிகழ்காலம் எதிர்காலம் மூன்றையும் காட்டும் காலக்கண்ணாடியாகவும் இப்படி ஒன்றோடொன்று முரண்பட்டு மோதிக் கொண்டு முன்னேறும் காலத்தின் பாலமாகவும் அவருடைய இலக்கியம் இலங்குவதில் வியப்பேதுமில்லை. இந்தப் புரட்சி இன்னும் முடிவுபெறவில்லை.""சத்தியசோதனை"" தொடர்ந்தவாறு இருக்கிறது என்பதை நாடறியும். எனவே பழைய பணச் சக்திகளுக்கும் புதிய பணச் சக்திகளுக்கும் மக்கள் சக்திக்கும் இடையே நலன்கள், பண்புகள் விஷயத்தில் நடக்கும் போராட்டம் அவருடைய இலக்கியத்துக்கு ஆதார சுருதியாகும். அவருடைய எந்தச் சிறுகதை அல்லது நாவலை எடுத்துப் பார்த்தாலும் இதைக் கண்டு கொள்ளலாம். எனவே தான் அந்தப் போராட்டம் போலவே இவருடைய இலக்கியமும் ஒவ்வொரு படியிலும் பலத்த சர்ச்சைப் புயலைக் கிளப்புகிறது. இந்தப் புயலில் சிக்காத இளைஞனோ முதியவரோ எமது நாட்டில் இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லமுடியும்..

மற்றொரு விஷயம் முரண்பட்டும் முரண்முடித்தும் நிகழ்கின்ற மாற்றங்களைச் சித்திரிப்பதே எழுத்தாளனின் பணி இந்தமாற்றங்களை நுட்பமாக கூராக, தைரியமாக, இழையிழையாகச் சிக்கறுத்து செங்கை ஆழியான் சித்தரிக்கிறது போல் வேறெந்த எழுத்தாளனும் செய்யவில்லை. ஆதிக்கப் பிடிப்புள்ள சக்திகள் இத்துறையில் வெளிப்படுத்தும் போலிக் கோஷங்களையும் பாசாங்குகளையும் அவர் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவது போல் வேறெந்த எழுத்தாளனும்அவ்வளவு துணிச்சலோடு செய்ததில்லை. இது அவரது உளத்தூய்மைக்கு ஒவ்வொரு அடியிலும் வினாடியிலும் சான்றளிக்கிறது. இலக்கியத் தளபதிகளாக இருந்தவர்களே ஒருசிலர் திசைமாறிய பறவைகளாகிப் பறந்தபோது செங்கை ஆழியான் இரும்புக் கோட்டை போல் உறுதியாக இருந்து இன்றைய இலக்கியத்துக்கு பெருமை சேர்த்தார். வளம் சேர்த்தார். இவரது படைப்புகளின் மூலம் வெளியான செய்திகள் ஜாதி இன மத மொழி பிராந்திய பாகுபாடுகளையும் எல்லை வரம்புகளையும் கடந்து விரிந்து பரந்துள்ளதை எவரும் மறுக்கமுடியாது. இவரது எழுத்தின் மூலம் மிகப் பழைய செல்லரித்துப் போன கண் மூடிப்பழக்கவழக்கங்களைத் துருப்பிடித்த காலத்துக் கொவ்வாத சமூக நியதிகளை பொருளற்ற சம்பிரதாயச் சடங்குகளைச் சுட்டெரித்துப் பொசுக்கியுள்ளார். ஒவ்வாதவற்றையும் உதவாதவற்றையும் மிகக் கடுமையாகச் சாடும் அச்சமறியாத விமர்சகராக சீர்திருத்தச் சிந்தனையாளராக விளங்குகின்றார். இவரின் சிறுகதைகள் மனதில் தங்கி இருக்கும் வல்லமை பெற்று சிந்தனைக்கு விருந்தாகிறது. இடவரது படைப்புக்கள் ஒவ்வொன்றும் சமுதாயத்தின் இருண்ட பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுபவையாய் அமைந்துள்ளது. யாருக்கும் அஞ்சாத ஒரு தனித்தன்மையை ஒவ்வொரு பாத்திரப் படைப்புகளிலும் காணலாம்..

உயர்ந்த கோட்பாடுகள் உன்னத இலட்சியங்கள் உண்மை நீதி ஆகியவற்றைப் பேணிக்காக்க எவருக்கும் அஞ்சாமல் எவர் தயவையும் நாடாமல் தனது நிலையிலிருந்து எள்முனையளவும் பிறழாமல் ஆரம்ப காலத்தில் இவர் தூக்கிப்பிடித்த பாதாகையை விடாமல் நிமிர்ந்த நடையோடு இன்னும் அவர் பயணம் செய்வதை பலரும் வியப்போடு பார்க்கின்றனர்..

எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் இலக்கிய வாழ்வுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட இவரது பயணத்தில் சஞ்சலம் வந்ததில்லை. சிலர் பதவிக்காக இலட்சியங்களைத் துறந்து சுகங்களை அனுபவித்த நேரத்தில் ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் அசையாமல் உறுதியாக இருந்தவர். வயதால் பெரியவர் உழைப்பு அனுபவங்களால் உயர்ந்தவர்..

மேடைகளிலும் சரி சம்பாஷனைகளின் போதும் சரி தனது கருத்துக்கள் கசப்பானவையாக மற்றவர்களால் கருதப்பட்டாலும் கூட அவற்றைச் சொல்வதற்கு அவர் தயங்குவதில்லை. எதற்காகத் தயங்க வேண்டும். யாருக்காகத் தயங்க வேண்டும். எவருக்கும் தலை வணங்காத போக்குசில வேளைகளில் இவரது பேச்சால் கூட்டத்தின் நோக்கமே வேறு திசைக்குச் செல்லக்கூடிய அளவிற்குப் பேசக்கூடிய பேராண்மை இவருக்குண்டு. சயேச்சையான அபிப்பிராயங்கள் எவ்வளவு வலுவுள்ளவையாக இருக்கவேண்டும் என்பதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு. நேரத்திற்குத் தக்கபடிவளைந்தும் குழைந்தும் அனுசரித்துப்போகும் உலகத்தில் அவர் ஒரு நிமிர்ந்த தென்னை. அவரின் பேச்சில் காரசாரம் இருக்கும். அழுத்தம் இருக்கும். முரட்டுத்தனமாகவும் இருக்கும். நயம் இருக்கும். நளினமும் இருக்கும். வேகமும் வீரமும் இருக்கும். ஆனால் விஷம் இருக்காது. நாட்டில் மிக உயர் விருதுகளை எல்லாம் பெற்றவர். ஒரு மனிதர் உதிர்க்கும் வார்த்தைகள் அவர் மனதைக் காட்டும் செங்கையாழியானின் வார்த்தைகளில் அவர் மனம் தெரிகின்றது. மனம் போல் வாழ்க்கை காலத்தால் மறையாதவை மறைக்கப்படவோ மறக்கப்படவோ முடியாத நிறை மனிதர். .

ஈழத்து இலக்கியம் என்ற கருத்துக்கு செயலுருவமளிப்பதற்காக எழுத்தாளர்களைத் தூண்டினார். திறனாய்வுத்துறையை ஊக்குவித்தார். ஆற்றலுள்ளவர்களை அடையாளங்கண்டு மேலும் முன்னேறத் தட்டிக்கொடுத்தார். வாழ்க்கையையும் உணர்வுகளையும் பேச்சுவழக்கையும் இலக்கியமாக்கிய முன்னோடி எழுத்தாளர் இலக்கியங்கள் காலத்திற்கேற்ப மனிதனை உருவாக்கவேண்டும். அதுகாலங்கடந்த ஞானங்களை உருவாக்கக் கூடாது என்கின்ற கொள்கை உடையவர். இலக்கியம் என்பது தொலைநோக்குக் கொண்டவர்களின் சிந்தனை என்று சொல்வதுண்டு. எப்படிப்பார்த்தாலும் செங்கையாழியானின் படைப்புக்கள் இந்த வகையைச் சேர்ந்தவையே என்பதில் ஐயமில்லை. அவரது பார்வையின் தூரம் மிக விரிந்தது. பிரபஞ்சத்தைப்போல் எல்லையற்றது. ஒரு காலகட்டத்தில் ஓகோ என்று சொல்லுமளவிற்கு நூல் விற்பனையும் சிறிது காலத்தில் மந்தமும் அடையாது செங்கையாழியானின் நூல்கள் எப்பொழுதும் ஒரே நிதானத்தில் மூன்றாவது தலைமுறையினராலும் பெரிதும் விரும்பிக் கேட்டு வாங்கிப் படிக்கப்பட்டு வருகின்றது என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும். எத்தனை நூல்கள் எழுதி இருக்கிறார் என்பது முக்கியமல்ல. என்ன எழுதியிருக்கிறார் அவை எவ்வளவு காலத்திற்கு நிலைத்து நிற்கும் என்பதையே பார்க்கவேண்டும்..

எனவே எமது நாட்டின் சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் காட்டும் காலக் கண்ணாடியாகவும் இப்படி ஒன்டோடொன்று முரண்பட்டு மோதிக் கொண்டு முன்னேறும் காலத்தின் பாலமாகவும் அவருடைய இலக்கியம் இலங்குவதில் வியப்பேதுமில்லை. இளமைத்துடிப்புள்ள முதிர்ச்சி. ஆனால் முதுமையின் நிழல் கூட செங்கைஆழியானின் ஆளுமையின் நிழலைத் தீண்டமுடியாது. எழுத்தாளர்களுக்குக் காதலைப்பற்றி எழுதுவது என்றால் கற்கண்டு சாப்பிடுவது போல செங்கைஆழியானோ இல்லாமை வறுமை பற்றி எழுதுவதில் இலக்கிய சாதனை புரிந்த குறிஞ்சி மலர். மக்களும் மனித சமுதாயமுமே இவர் படித்த பள்ளியும் கல்லூரியும்இன்று பல பள்ளிகளும் கல்லூரிகளும் இவர் எழுத்தைப் பாடமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன. கலை இலக்கியங்கள் வெறுமனே ரசனைக்காகவும் பொழுதுபோக்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டவையல்ல. சமுதாயத்தின் மாற்றத்துக்கும் ஏற்றத்துக்கும் துணை நிற்பவை. அதனால் கலை இலக்கியங்களை காத்து வளர்த்து ஊக்குவிக்க வேண்டியது மக்களின் கடமை. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசங்கத்தின் பொறுப்பு..

சர்க்கரை இருப்பதைத் தெரிந்து கொள்ளாமல் தெரிந்தவர் என்பதால் இலுப்பம் பூவுக்கும் ""பூஷணம்"", ""“செம்மல்"" எனப் பட்டமளித்து முடிசூட்டுதலை என்ன என்பேன். கடவுள் வரங்கொடுத்துவிட்டபோதிலும் நடுவில் குந்தியிருக்கும் நந்திகள் நகர மறுப்பதை என்னவென்பேன். ""பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்"" என்று பாரதி கூறியது இதுதானோ? அசையாத தேரைக் கூட அசைக்க முடியும் என்றநம்பிக்கையும் உறுதியும் கொண்டு வடம் பிடிக்கத் தயங்காதவர் செங்கைஆழியான். இந்த இராமருக்குத் துணையாக இலட்சுமணராக நிற்போம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இன்றைய இலக்கியத்தின் ஜாம்பவான்"