"புதிய இலைகளால் ஆதல்' கவிதைத் தொகுப்பு..
கல்முனை பாண்டிருப்பில் இருந்து கவிதைக் குரல் நூலுருவாக வெளிப்பட்டிருக்கிறது. ""புதிய இலைகளால் ஆதல்'' தான் அது. "மலரா' எனும் புனை பெயருக்குள் மறைந்திருந்து எழுதி வருபவர் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவி டாக்டர் திருமதி. புஸ்பலதா லோகநாதன். கிழக்கிலிருந்து பெண்பாற் கவிஞர்கள் தங்கள் உணர்வுகளையும் கவிதையூடாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலோட்டமான பார்வையில் இக் கவிதைகள் காதல் தோய்ந்தவை. ஆனால் முற்று முழுக்கக் காதலுக்கானவையல்ல. கணவன், குழந்தை, தோழி, தோழன் எனப் பரிமாணங்களைக் கொண்ட பலரையும் பொருத்திப் பார்க்க இடமளிக்கும் வெளி அங்குண்டு...'' என பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன் தன் பார்வையினைச் சொல்கிறார். கவிதையில் எளிமை இருக்க வேண்டுமென்று ஒரு சாராரும், கவிதை விளங்காத் தன்மை கொண்ட ஆழத்தை நோக்கியே நகர்வதாக இயங்குதல் வேண்டுமென்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். எது எப்படி இருந்த போதும் கவிதை கவிதையாக இருக்கவேண்டும். அது எளிமையான நடையாகவும் இருக்கலாம். பின் நவீனத்துவமாகவும் இருக்கலாம். சொல்லும் முறையில் சொல்லும் திறனில் குறியீடுகளைக் கையாளும் வல்லமையில் வேரூன்றும் திறன் உடையதாகவும் இருக்கவேண்டும்.
மேற்கூறிய அம்சங்களின் அடிப்படைக்குள் மலராவின் கவிதைகள் வண்ணத்துப் பூச்சிகளாய் சிறகடிக்கின்றன. ஒரு கவிதையைப் படித்தவுடன் ஒரு மலரின் வாசம் அல்லது அதன் சிலிர்ப்பு அனுபவம் நமக்கும் கிடைப்பதைத் தவிர்க்க முடியாது. "புதிய இலைகளால் ஆதல்' தலைப்பே தத்துவார்த்தமான தூறலை ஏற்படுத்தி நிற்கின்றது. மொத்தமாக நாற்பத்தி எட்டு (48) கவிதைகள் சேர்ந்து புதிய இலைகளால் ஆதலாகியிருக்கிறது. மலராவின் கவிதைகளை இலைகளால் ஆதல் என்பதைவிட, மலரிதழ்களால் ஆதல் என்று சொன்னாலும் பொருத்தந்தான். ஒரு பெண் கவியின் உணர்வுகள் எப்படி இருக்கும்? கனவுகள், நினைவுகள் எப்படி எப்படி இருக்கும்? வாழ்வின் சுவைத்தலின்பம், அதன் சோகத்தின் எதிரொலி என்பவற்றின் வெளிப்பாட்டு உதிர்வு மொழிக்குள் புணரும் போது எப்படிக் கோலம் செய்யும் என்பன போன்ற எதிர்பார்ப்புக்களின் தேக்கத்தில் நழுவி உரசுகிறது. வாசகர்கள் இதயத்தின் அந்தப்புரத்தில் குடியேறி விடுகிறது. எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது. மலராவின் கவிதைகளின் தோற்றம் பற்றியும் அவை மாற்றும் மன உந்துதல் பற்றிய நெகிழ்வும் நிகழ்த்தி விடுவதாக "மீறியும் மீறாத முன் நகர்தல்' என்ற தலைப்பில் ஜெயகாந்தனைப் போல் நீண்ட ஒரு உரையினை பேனாவால் நிகழ்த்தியுள்ளார் பிரபல கவிஞர் சண்முகம் சிவலிங்கம்.
பெண்மைக்குள் இருக்கின்ற உண்மைகளின் தொகுப்பாய் விதைக்குள் கிளைகளையும், விழுதுகளையும் கட்டி வைத்திருக்கின்ற ஆலவிருட்சமாக பனித்துளியை மழையாக்குகின்ற விசித்திர நெருப்பாக, வேர்களிலும் பூக்கள் மலர்கின்ற வனமாக புதிய இலைகளால் ஆதல் புன்னகைக்கிறது. அவலங்களால் வாழ்க்கை ஆதலை வெறுக்கின்றன, ஓர் உணர்வின் உதிர்தலாக ""கனாக் கண்டேன்...'' கவிதையைப் பார்க்க முடிகிறது.
எந்த செக் பொயின்றுமில்லா வீதிகள் வண்ணப்பூக்கள் நிறைந்த வீதியோரங்கள்
புன்சிரிப்பு மட்டும்
சுமக்கும் மனிதர்கள்
சந்தோஷங்கள் நிஜமாகி கடை ஓரத்தில் புன்னகை சிதற
பெரும் சத்தமொன்றில்
அரண்டு எழுகின்றேன்
கலைந்த கனவுகளிலிருந்து
பல வகையான ஆயுதங்கள்
உதிர்ந்து கொண்டிருந்தன''
இறுதி இரு வரிகளில் நிகழ்ந்துபோன யதார்த்தம் அமர்ந்திருப்பதை நாமும் அசைபோட்டுப் பார்க்கமுடிகிறது. "கலியுகமல்ல' என்ற கவிதை, துப்பாக்கி என்ற இரும்பு அரக்கனின் சிநேகமே வேண்டாம் என்று வற்புறுத்துவதையும், பலாத்காரமாக அதை நிராகரிப்பதையும் காண முடிகிறது. ""என் பிள்ளைக்கு விளையாட்டுத் துவக்குக்கூட அறிமுகமாக வேண்டாமென எண்ணுமோர் அம்மா...'' என்று நகர்கிறது கவிதை. கல்லில் செதுக்குவது சிற்பம் மட்டுமல்ல. காலத்தையும் அதில் செதுக்க முடியும் என்பதை மலரா தனது கவிதைகளினூடே நிரூபித்திருக்கிறார். "காற்றில் விடு' கவிதை பெண்ணின் சாதாரண இருப்பைப் பற்றி பேசுகிறது. ஆனால் அந்த இருப்புக்குள் பெண்ணியல் விதையாக முளைத்திருக்கிறது.
நறுக்கி விடாதே என் சிறகுகளை சிலுவைகளைத் தூரமாக்கு
இலேசாக வாழ்வோம்
என்று மெலிதாகப் பேசினாலும், அது இதயத்தில் எதிரொலிப்பதைத் தவிர்க்க முடியாதுள்ளது. "நாணலாய் நான்' கவிதை அன்பு பற்றி அதன் ஆழமான அழகின் அசைவு பற்றிப் பிரஸ்தாபிக்கிறது. ""விருட்சமாய் நிற்கிறாய் அதுவும் அதிகப் பச்சையாயும் துளிர்த்ததாயும் பூவும் கனியும் கிளை விட்ட விருட்சமாய் ............................... என அன்பின் இருப்பிடத்தை உவமயப்படுத்தி குறியீடாகப் பேசி ""எல்லாமும் முழுமையாய் நான் எனும் நாணல் இன்று
நீ எனும் விருட்சத்தினடியில்...
என்று முடிகிறது கவிதை. படித்து முடித்தவுடன் வாசகர் நெஞ்சத்திலும் ஒரு பூ அவிழ்வதைத் தவிர்க்க முடியாது. இப்படி மலராவின் கவிதைகள், தமிழுக்குக் கிடைத்திருக்கின்ற இன்னுமொரு வளம். கவிதைகள் சில இறுக்கம் போதாமலும், நெருக்கமில்லாமலும் இருப்பதை மலரா தவிர்த்திருக்கலாம்







0 Response to ""புதிய இலைகளால் ஆதல்' கவிதைத் தொகுப்பு.."
Post a Comment