"சரத் பொன்சோகாவுடன் இரகசிய ஒப்பந்தம் எதுவுமில்லை" - த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்

ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் எதுவுமில்லை என த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேசரி வார வெளியீட்டுக்கு அளித்த விசேட செவ்வியில் தெரிவித்தார்.

அவர் அளித்த செவ்வி விவரம் பின் வருமாறு:
கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிப் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் இது சிங்கள மக்களுக்கும் நாட்டின் இறைமைக்கும் அச்சுறுத்தல் மிக்கதென்றும் அரசு தரப்பில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்கள் கருத்தென்ன?

பதில்: ஓர் ஊடகத்தில் வெளிவந்த தவறான தகவல் காரணமாகவே இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது எமது தலைவர் இரா.சம்பந்தன் எந்த ஊடகங்களுக்கும் பேட்டியளிக்கவுமில்லை. இவ்வாறன கருத்துகளைத் தெரிவிக்கவும் இல்லை. கடந்த 5 ஆம் திகதி நாம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாடு முடிந்தவுடன் சம்பந்தன் ஐயாவைப் பின் தொடர்ந்த ஒரு ஊடகவியலாளர் "நீங்கள் ஏன் சரத் பொன்சேகாவை ஆதக்கிறீர்களெ'னக் கேட்டார். அதற்குச் சம்பந்தன் ஐயா சொன்ன பதில் இதுதான், "இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பலமுறை எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசினோம்.

ஆனால் அவடமிருந்து எந்தவிதமான நம்பகத்தன்மைமிக்க உறுதிமொழிகளும் கிடைக்கவில்லை. பின்னர் சரத் பொன்சேகாவுடன் பேசினோம். இவர் அவரை விடச் சிறப்பானவரெனத் தோன்றியது. அதன் காரணமாக நாம் இவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித் தோம்.' என்றுதான் சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இரா.சம்பந்தன் விரைவில் அறிக்கை யொன்றினையும் வெளியிடவுள்ளார்.

கேள்வி: ஜெனரல் சரத் பொன் சேகாவை நீங்கள் ஆதரிப்பதற்கான காரணங்கள் தான் என்ன?

பதில்: இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமானதும் பிரதானமானதுமான காரணம், இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பாக அதாவது சிறுபான்மையினச் சமூகம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த நான்கு வருடகாலமாக எவ்வாறு நடந்து கொண்டாரென்று பார்க்கும் போது நிச்சயமாகத் தமிழ் மக்கள் திருப்தி கொள்ளக்கூடிய எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை. அவரது காலத்தில்தான் பாரிய யுத்தம் முன்னெடுக்கப்பட்டு பல இலட்சக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து பலதரப்பட்ட முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். அவரது காலகட்டத்தில்தான் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காணாமல் போனார்கள். அவர்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை.

எமது கட்சியைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டதும் இவரது காலத்தில்தான். இது தொடர்பில் சரியான சாட்சியங்களை நாம் கொடுத்தும் கூட எந்த விதமான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்ளவில்லை. இது போன்று பல விடயங்களை நாங்கள் அடுக்கிக் கொண்டே போக முடியும். இன்றைய அரசாங்கத்தின் கடந்த நான்கு வருடமென்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில்.. மிகப் பாதகமாகவே அமைந்திருந்தது.

ஏன்? ஒட்டு மொத்தமான நாட்டையே எடுத்துப் பார்க்கின்ற போது கூட அது ஒரு குடும்ப ஆட்சியென்ற அளவுக்குப் போய் அது சிங்கள மக்களையும் எந்தளவுக்குப் பாதித்துள்ளதென்பதனை அந்த மக்களும் நன்கு உணர்வர். ஆகவே, கடந்த நான்கு வருடகால விடயங்களை நாங்கள் கவனத்தில் எடுத்துப் பார்ப்போமாகவிருந்தால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியமோ தேவையோ எமக்கு இல்லையென்பதே பதிலாக அமையும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் "மஹிந்த சிந்தனை" என்ற கொள்கைத் திட்டமொன்றைக் கொண்டு வந்திருந்தார். அந்தக் கொள்கைப் பிரகடனத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவே இன்னொரு முறைக்கு மக்கள் ஆணையை இப்போது வேண்டி நிற்கிறார். ஆனால், அந்த மஹிந்த சிந்தனையின் பிரகாரம்தான்" வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகளே பறிதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாகாணங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. இவையெல்லாம் சிங்கள பௌத்த மேலாதிக்கமே ஒட்டுமொத்தமாக கோலோச்சி செய்ய வேண்டுமென்பதனையே காட்டுகின்றன. இந்த நிலையில் மேலும் ஆறு வருடங்களுக்கான ஆணையை அவருக்கு வழங்குவோமாகவிருந்தால் அது நாம் தற்கொலை செய்வதற்குச் சமனானது.

ஆகவேதான், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்பினோம். அந்த மாற்றத்தை உருவாக்கக் கூடிய வல்லமை கொண்டவராக ஜெனரல் சரத் பொன்சேகா உள்ளாரென்றே எமக்குத் தெரிகிறது. ஆகவேதான், அரசியல் ரீதியாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பொருளாதார ரீதியாக முன்னேற்றங்களைக் கொண்டு வருவதற்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் சமத்துவமாக வாழ்வதற்கும் நிச்சயமாக இந்த நாட்டில் ஓர் ஆட்சி மாற்றம் தேவைப்பட்டது. இவற்றினைக் கருத்தில் கொண்டே நாம் சரத் பொன்சேகாவை ஆதரிக்கிறோம்.

கேள்வி: தமிழ் மக்கள் தொடர்பில் ஏதும் கோரிக்கைகளை நீங்கள் முன்வைத்தீர்களா?

பதில்: இரண்டு விடயங்களை நீங்கள் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் பல தடவைகள் இரு பிரதான வேட்பாளர்களையும் சந்தித்து எங்களது கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்தோம். அந்தக் கோரிக்கைகள் இரண்டு பிரிவுகளைக் கொண்டவை.

ஒன்று உடனடிப் பிரச்சினைகள்.

அதாவது, வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த பல இலட்சம் தமிழர்கள் ஒருபுறம், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மறுபுறம், இவற்றை விடவும் வடபகுதி உயர்பாதுகாப்பு வலயங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னொருபுறம். இவ்வாறு இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது சொந்த இடங்களில் உடனடியாக மீளக்குடியேற்ற வேண்டுமென்பது முதலாவது கோரிக்கை.

அடுத்ததாக அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டிய தேவை இப்போது உள்ளது. 15வருடங்களுக்கும் மேலாக தமிழ் மக்கள் தமது சொந்த நிலபுலங்களிலிருந்து இடம்பெயர்ந்து மிகத்தூரத்தில் வசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அந்த மக்கள் மீளக்குடியேற்றப்பட வேண்டும் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட வேண்டும். இதனை விடத்தேவைக்கு அதிகமான இராணுவத்தினர் வடக்கு, கிழக்கில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த இராணுவத்தினர் முகாம்களுக்குத் திருப்பி அழைக்கப்பட வேண்டும். அவர்களை வேறு வேலைகளுக்கு அமர்த்திக் கொள்ளலாம்.

தேவைக்கதிகமான இராணுவத்தினர் திருப்பியழைக்கப்படும் போதுதான் ஒரு சாதாரண நிலை தோன்றும். யுத்த காலத்திலிருந்த அதே நிலை யுத்தம் முடிந்தும் தொடர்ந்து நீடிப்பதாகவிருந்தால் நிச்சயமாக அங்கு சாதாரண நிலை தோன்றவில்லையென்பதே அர்த்தமாகிறது.

இந்த நாட்டில் ஜே.வி.பியினரின் கிளர்ச்சிகள் இரு தடவைகள் இடம்பெற்றுள்ளன. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். சொத்துகள் நாசமாக்கப்பட்டன. இறுதியில் அரசாங்கம் ஜே.வி.பியைத் தோற்கடித்தது. பின்னர் என்ன நடந்தது? ஜே.வி.பியினரின் ஆதிக்கத்திலிருந்த அனைத்துப் பகுதிகளிலும் நிலை கொண்டிருந்த இராணுவம் தமது முகாம்களுக்குச் சென்று விட்டது. ஆனால் வடக்கு, கிழக்கில் நடப்பது என்ன? யுத்தம்தான் முடிந்து விட்டதே, இராணுவம் முகாக்முகுத் திரும்பிவிட்டதா இல்லையே? எல்லா இடங்களிலும் தொடர்ந்தும் இராணுவ மயமாகவே உள்ளது. இது நியாயமா? இவைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியிருந்தோம்.

ஆனால் இதுவரை இலங்கை அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையே? கிழக்கு மாகாணத்தைப் பாருங்கள். அங்கு தமிழ், முஸ்லிம் மக்களுக்கே உரித்தான காணிகளுக்கு என்ன நடந்துள்ளது? மறுபுறம் அரச காணிகளைக் கூடத் தனது விருப்பத்துக்கு ஏற்ற வகையில் அரசாங்கம் கையகப்படுத்தி வருகிறது.

திருகோணமலையில் உள்ள காணிகளைக் காட்டி இவை யாருக்குச் சொந்தமானவை என்று கேட்டுப் பாருங்கள். இது பிரிகேடியரின் காணி, இது லெப்டினனின் காணி. இதுமேஜரின் காணி என்றே பதில் கிடைக்கும். இவையெல்லாம் எந்தளவுக்குச் சரியான விடயங்கள்? இவை குறித்தெல்லாம் நாம் இரு தரப்பினருடனும் பேசினோம். இது போன்றே தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் கலந்துரையாடினோம். யுத்தம் டிவடைந்ததும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அல்படுத்துவேனென்றும் அதற்கு மேலாகப் பிளஸும் தருவேன் என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார். ஆனால் இது வரை ஒன்றும் நடைபெறவில்லை.

அதுமாத்திரமல்ல.. இனப்பிரச் சினை தீர்வு தொடர்பில் சிபாரிசுகளை முன் வைக்கும் வகையில் இரு குழுக்களையும் ஜனாதிபதி நியமித்திருந்தார். அவற்றில் ஒன்று சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு, மற்றது நிபுணர்கள் குழு. இந்த இரு குழுக்களும் இணைந்து தீர்வுத் திட்டத்துக்கான சிபார்சுகளை முன் வைத்தன. ஆனால், என்ன நடந்தது? அனைத்தும் குப்பைக் கூடைக்குள்.. இவைகள் குறித்தும் இருதரப்பினருடனும் பேசினோம். ஆனால் இன்றைய ஜனாதிபதியோ தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை, அன்றாடப் பிரச்சினை, மனிதாபிமானப் பிரச்சினைகள் இவைகளைத் தீர்ப்பதற்குச் சரியான முன்னெடுப்புகளையோ சரியான நிகழ்ச்சி நிரலையோ கொண்டிருக்கவில்லையென்றுதான் கூறடியும்.

ஆனால், ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் நாம் பேசும் போது, யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் நிச்சயமாக இவற்றில் எல்லாம் மாற்றம் கொண்டு வரப்படலாம். மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான சூழலைத் தோற்றுவிக்கலாம். அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் மீள் சிந்தனைக்குட்படுத்தப்பட்டு மக்களைக் குடியேற்றுவதற்கான வழிவகைகள் ஆராயப்படலாம் போன்ற பல விடயங்கள் அவரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டன. இதனை நாங்கள் நம்புகிறோம். ஆனால் இவை தொடர்பில் எந்தவிதமான உடன்படிக்கைகளும் கைச்சாதிடப்படவில்லை.

கேள்வி: புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் வழங்கிய அழுத்தம் காரணமாகவே நீங்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறதே?

பதில்: ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து நாம் பலதரப்பட்டவர்களுடன் கலந்துரையாடினோம். தமிழ் புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர் சமூகம், பல்வேறுபட்ட மட்டங்களைச் சேர்ந்த மக்கள், நீங்கள் குறிப்பிட்டது போன்று புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் என்று பலதரப்பட்டோருடனும் சுமார் மூன்று வாரங்கள் கலந்துரையாடப்பட்டன. இது மட்டுமல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பல விவாதங்கள் இடம்பெற்றன. இவையனைத்துக்கும் பின்புதான் நாம் ஒரு தீர்மானத்துக்கு வந்தோமே தவிர எம்மை யாரும் வற்புறுத்தவில்லையென்பதே உண்மை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் பூரண நம்பிக்கை வைத்துள்ளார்கள். தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்பது அசியும் பருப்புமல்ல. எமது இந்த அறுபது வருட காலப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வேண்டும். இந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். இந்த நாட்டில் நாங்கள் சிங்கள மக்களுக்குச் சமனாக எமது மண்ணை வளப்படுத்தி, அபிவிருத்தி செய்து எம்மை நாமே பார்த்துக்கொள்ளக் கூடியதான ஒரு சூழலை உருவாக்க வேண்டும். இவற்றினைத்தான் இந்த மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.

ஆகவே, சரத் பொன்சேகா பதவிக்கு வந்தாலென்ன, மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்தாலென்ன? எமது பேச்சுவார்த்தைகள் தொடரும். எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் நாம் ஜனநாயக ரீதியாகத் தொடர்ந்து போராடுவோம் என்பது மட்டும் நிச்சயம். அதாவது, எமது மண்ணை, எமது மக்களை, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாம் ஜனநாயக வழியில் போராடுவோம்.

ஆகவே, யார் வந்தாலும் சரிதான், நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் தீர்வுத் திட்டத்தின் அடிப்படையிலோ அல்லது அதற்கு மேலாகவோ எங்களது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். தமிழ் மக்கள் கௌரவமாக, சுதந்திரமாக வடக்கு, கிழக்கில் தங்களைப் பார்த்துக் கொள்ளக் கூடிய ஒரு கௌரவமான தீர்வாக அது அமைய வேண்டுமென்பதே எமது கோரிக்கை.

கேள்வி: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதி, நேர்மையான தேர்தல் நடைபெறுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

பதில்: இல்லை, நூறு வீதமாக நீதியான, நேர்மையான தேர்தல் நடைபெறுமென நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அத்துடன் இது ஒரு இறுக்கம் நெருக்கம் கொண்ட தேர்தலாகவே அனைவராலும் கணிக்கப்படுகிறது.

கேள்வி: ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவீர்களா?

பதில்: அதனை ஒரு பாரிய பிரச்சினையாக நாங்கள் கருதவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் வாக்குகள் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்குக் கிடைக்கும் வகையில் எமது பிரசாரங்கள் அமையும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to ""சரத் பொன்சோகாவுடன் இரகசிய ஒப்பந்தம் எதுவுமில்லை" - த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்"